Saturday, April 4, 2026 12:49 pm
மலையக மக்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த 2ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
பல தலைமுறைகளாக உழைத்தும், தமக்கென ஒரு துண்டு நிலம் இன்றி தவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக,
பல தலைமுறைகளாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வு வேண்டும், தற்காலிக திட்டங்களை விடுத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய நிலையான தனி வீடுகள் வழங்கப்பட வேண்டும், இயற்கை அனர்த்தங்களால் வீடுகளை இழந்து இன்றும் தற்காலிக முகாம்களில் தவிக்கும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் போராட்டகாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.

ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகக் கூடிய போராட்டக்காரர்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். “தற்காலிக திட்டங்கள் வேண்டாம், நிலையான தீர்வு வேண்டும்” என்பதே இவர்களின் பிரதான குரலாக ஒலித்தது.
மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

