Monday, March 30, 2026 11:49 am
கோலகலமாக ஆரம்பித்த 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பெற்றுள்ளது.
ரோஹித் ஷர்மா மற்றும் ரியான் ரிகல்டனின் வலுவான தொடக்க விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தினால் 221 என்ற மிகப்பெரிய வெற்றி இலக்கினை மும்பை ஐந்து பந்துகள் மீதமிருந்த நிலையில் கடந்தது.
நேற்றைய தினத்துக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் முந்தைய ஏழு சேஸிங்கிலும் 220 ஓட்டங்களுக்கு மேற்பட்ட இலக்கை ஒருபோதும் துரத்திப் பிடித்ததில்லை. 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு ஐ.பி.எல். சீசனின் தொடக்க ஆட்டத்திலும் அவர்கள் வெற்றி பெற்றதும் இல்லை.
2012 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எட்டு விக்கெட் வெற்றிக்குப் பின்னர் ஒவ்வொரு சீசனின் தொடக்க ஆட்டத்திலும் தோல்வியடைந்து வந்தது.
இந்த 13 ஆண்டுகால தோல்விப் பயணமானது நேற்றைய தினம் வான்கடேயில் 5 முறை சம்பியன் பட்டம் வென்ற அவர்களின் சொந்த மைதானத்தில் ரோஹித் ஷர்மாவின் அபாரமான ஆட்டம் மற்றும் ரியான் ரிகல்டனின் வலுவான பங்களிப்பாலும் முடிவுக்கு வந்தது.
நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது.
தொடக்க வீரர்களான கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஜிங்க்யா ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களையும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபின் ஆலன் 37 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ரன் வேகத்தைக் குறைக்காமல் விளையாடினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற வெற்றியிலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது
221 என்ற இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கில்டன் இருவரும் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
4.1 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்த மும்பை இந்தியன்ஸ் பவர்பிளேவில் மட்டும் 80 ரன்கள் சேர்த்தது. வைபவ் அரோரா, பிளெஸிங் முசர்பானி, கார்த்திக் தியாகி, வருண் சக்கரவர்த்தி என அனைவரின் பந்துவீச்சையும் மும்பை இந்தியன்ஸ் ஓப்பனர்கள் பவுண்டரிகளாக்கினார்கள்.
பவர்பிளே முடிந்த பிறகும் இந்த ஜோடியின் அதிரடி தொடர்ந்தது. அதன் காரணமாக 8.1 ஓவர்களிலேயே மும்பை அணி 100 ரன்களைக் கடந்தது. பவர்பிளேவுக்கு பிறகு தன் வேகத்தைக் கூட்டிய ரிக்கில்டன் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 11.5 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்தது. 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா.
ரிக்கில்டன் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 16 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 18 ரன்கள், நமன் திர் 5 ரன்கள் ஆட்டமிழக்காமல் கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸின் வெற்றியை உறுதி செய்தனர். 19.1 ஓவர்களிலேயே மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
இன்று இரவு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இன்றைய ஆட்டமும் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

