Tuesday, March 17, 2026 4:04 pm
சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களிடம் வாக்குமூலம் சேகரிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் பல்கலைக்கழக பதிவாளர் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் கீழே இறக்கி, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இச்சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மற்றும் காணொளி காட்சிகள் தொடர்பாக, பொலிஸ் அதிகாரிகள் பல்கலைகழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வாக்குமூலம் சேகரிக்க பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

