Friday, March 6, 2026 10:46 am
பத்தாவது ஐசிசி T20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதியது. நியூஸிலாந்தை எதிர்த்தாடப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டித் தொடராக இது காணப்பட்டது.
இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற முயற்சிக்கும் என்ற காரணத்தினால் இந்தப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என்பது இரசிகர்களின் எண்ணமாகக் காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு துளியும் வீண்போகவில்லை என்றே சொல்ல வேண்டும்.
முதல் சுற்றில் ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா தொடர்ந்து நமிபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளை மிக இலகுவாக வெற்றிகொண்டு சுப்பர் 8 சுற்றில் தகுதிபெற்றது. சுப்பர் 8 சுற்றில் ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இந்தியா, அடுத்த இரண்டு போட்டிகளில் ஸிம்பாப்வேயையும் மேற்கிந்தியத் தீவுகளையும் வெற்றிகொண்டு கடைசி அணியாக அரை இறுதி போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இங்கிலாந்து அணியானது நேபாளம், ஸ்கொட்லாந்து, இத்தாலி ஆகியவற்றுடன் மோதி வெற்றிபெற்றது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்தது. எனினும் குழுவில் 2ஆம் இடத்தைப் பெற்றதன் மூலம் சுப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியது. சுப்பர் 8 சுற்றில் இலங்கையை இலகுவாகவும் பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகளை சற்று சவாலுக்கு மத்தியிலும் வெற்றிகொண்டு அரை இறுதிக்குள் இங்கிலாந்து நுழைந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்தாவது ஐசிசி T20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியல் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி ப்றூக் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது.
சஞ்சு செம்சன், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். இஷான் கிஷான் 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். மொத்த எண்ணிக்கை 160 ஓட்டங்களாக இருந்தபோது சஞ்சு செம்சன் ஆட்டம் இழந்தார்.
சஞ்சு செம்சன் 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்தார். ஷிவம் டுபே 25 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டறிகள் உட்பட 43 ஓட்டங்களையும், திலக் வர்மா 21 ஓட்டங்களையும், ஹார்திக் பாண்டியா 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஆதில் ராஷித் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 254 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.
இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம்.
பில் சோல்ட் 5 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹெரி ப்றூக் 7 ஆகிய குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். இது இங்கிலாந்துக்கு பேரிடியைக் கொடுத்தது. ஜொஸ் பட்லர் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்து 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். டொம் பென்டன் 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ஆனால் ஜேக்கப் பெத்தெல், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர். வில் ஜெக்ஸ் 20 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பவுண்டறி எல்லையில் அவரது பிடியை எடுத்த அக்ஸார் பட்டேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியால் பந்தை அர்ஷ்தீப் சிங்கை நோக்கி எறிந்துவிட்டு பவுண்டறிக்கு வெளியே சென்றார். அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்ததால் வில் ஜெக்ஸ் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து ஜேக்கப் பெத்தெல், சாம் கரன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்திரந்தபோது சாம் கரன் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஷிவம் டுபேயின் முதல் பந்தில் இரண்டாவது ஓட்டத்துக்கு முயற்சித்த ஜேக்கப் பெத்தெல் ரன் அவுட் ஆனார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜேக்கப் பெத்தெல் 48 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்திய பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் ஒன்றையொன்று எதிர்த்தாடியமை விசேட அம்சமாகும். அதிலும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரை இறுதி போட்டிகளில் வெற்றிபெற்ற அணியே கடைசியில் ரி20 உலக சம்பியனாகியும் இருந்தது.
கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய நேற்றைய தொடரில் இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அஹமதாபாத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

