Thursday, March 5, 2026 4:40 pm
சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபடும் இலங்கை பல்தினம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்றொழில் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் கண்டிப்பாகத் தங்களின் பாரம்பரிய கடற்றொழில் எல்லைகளுக்குள் மாத்திரம் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிமுகமில்லாத கப்பல்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களை நோக்கி நகர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலில் இருக்கும் போது ஏனைய கப்பல்களுடன் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்வதையோ அல்லது எந்தவொரு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்றொழிலுக்குச் செல்லும் போதும் அல்லது கரைக்குத் திரும்பும் போதும் வழமையாகப் பயன்படுத்தப்படும் கடல் வழிப் பாதைகளையே பின்பற்றுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் இதுவரை இலங்கை கடற்றொழில் படகுகள் எதற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

