Thursday, March 5, 2026 11:19 am
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் போரினால் வெறுமனே குறித்த மூன்று நாடுகள் மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட உலக நாடுகளும் அதன் தாக்கத்தை அனுபவித்து வருகின்றன. போர் காரணமாக சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் நேற்றைய தினம் இலங்கையின் காலி கடற்பரப்பில் வைத்து ஈரானின் போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஆசியக் கடற்பரப்பில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பிராந்திய ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் தெற்கு கடற்படைக்குச் சொந்தமான ‘மௌட்ஜ்-கிளாஸ்’ (Moudge-class) ரகத்தைச் சேர்ந்த ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலே இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் இலங்கை கடற்படையினர் இதுவரை சுமார் 87 உடல்களை மீட்டுள்ளதுடன், மேலும் 32 பேரை உயிருடன் மீட்டு காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன 61 படையினரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவினால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின்போது கப்பலில் சுமார் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ‘மிலன் 2026’ சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போது சர்வதேச கடல் பகுதியில் வைத்து ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பல் டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் செய்தியாளர் மாநாட்டில் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச கடல் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதையும், அமெரிக்காவின் இராணுவ பலத்தையும் நிரூபிக்கும் ஒரு சான்றாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு ‘மார்க் 48’ ரக ஏவுகணை மூலம் குறித்த கப்பல் வெற்றிகரமாக மூழ்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிரிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை எனச் சுட்டிக்காட்டிய அவர் அமெரிக்காவின் உலகளாவிய பாதுகாப்பு எல்லையை இது பறைசாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் கடற்படை வலிமையை முற்றிலுமாக அழிப்பதே தமது முக்கிய இலக்குகளில் ஒன்று என அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால் அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் போர் தொடுத்தன.
இந்தநிலையில் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சியில் ‘ஐரிஸ் டெனா’ மாலுமிகள் அணிவகுத்துச் சென்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமன்றி தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளையும் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க கடற்படை தமது துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்தியப் பெருங்கடல் பகுதியானது, ஆசியா – மத்திய கிழக்கு – ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கியமான ஒரு கடற்பாதையாக விளங்குகிறது. இப்பகுதியில் இடம்பெறும் எந்தவொரு இராணுவ மோதலும் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சர்வதேச கடல் சட்டங்களின்படி சர்வதேச நீர்ப்பரப்பில் பயணிக்கும் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்துவது கடுமையான சட்ட மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் நெருக்கமாகக் கவனித்து வருகின்றன.
சர்வதேச சமூகம் அமைதியான தீர்வை வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்த மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் போது அவை சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பரபரப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

