Monday, March 2, 2026 8:33 am
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, பலாவ் குடியரசின் கொடியுடன் பயணித்த ‘ஸ்கைலைட்’ என்ற எண்ணெய் கப்பல், முசந்தம் மாகாணத்தில் உள்ள காசாப் துறைமுகத்திற்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக ஓமான் நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த கப்பலில் பணியாற்றிய 15 இந்தியர்கள் , 5 ஈரானியர்கள் என மொத்தம் 20 ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு ஊழியர்கள் பல்வேறு அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
ஈரானின் புரட்சிகர காவல்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பலும் செல்ல அனுமதி இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20% பங்கு வகிக்கும் இந்த வழித்தடம் முடக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

