Thursday, February 26, 2026 2:37 pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
101 வயதான நல்லகண்ணு உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை காலமானார். சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழகத்துக்குச் சென்று, நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியதுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த பெருந்தகை நல்லக்கண்ணு ஐயாவிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். எளிமை, நேர்மை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய மதிப்புகளின் உருவாக வாழ்ந்த அவர், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டும் ஒளியாக நிலைத்திருப்பார்.
அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

