Tuesday, February 24, 2026 2:38 pm
இந்தியா – ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றது. ராஞ்சியில் இருந்து டில்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் பீச்கிராஃப்ட் சி90 விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
ராஞ்சியில் இருந்து மாலை 7:11 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்த குறித்த விமானம் இரவு 10 மணியளவில் டில்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகளுக்குப் பின்னர, சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில் குறித்த விமானத்தில் இருந்த நோயாளி, வைத்தியர்கள், உதவியாளர்கள் மற்றும் விமானிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடம் மிகவும் அடர்ந்த வனப்பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் குறித்த இடத்தை சென்றடைவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இன்று காலை அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உடல்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

