Tuesday, February 24, 2026 2:09 pm
இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுடன் 23 மடிக்கணினிகள், 11 கையடக்க தொலைபேசிகள், ஏழு ரவுட்டர்கள், ஒன்பது குரல் மாற்றிகள் மற்றும் 3,280 வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜாவத்தா சாலை, கொழும்பு 05 மற்றும் டொன் கரோலிஸ் சாலை ஆகிய முகவரிகளில் தற்காலிகமாக வசித்து வந்த சீனப் பிரஜைகள் குழு ஒன்று சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இந்தத் தகவலின் பேரில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட 16 சீனர்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வரி இல்லாத சிகரெட்டுகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடுகளில் மேலும் சோதனை நடத்தியதில் மடிக்கணினிகள் மற்றும் பிற உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இந்த சந்தேக நபர்கள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், பிரமிட் மோசடிகள் மூலம் பல்வேறு நபர்களை ஏமாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

