Monday, February 16, 2026 1:39 pm
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றன.
பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

கடந்தகாலங்களில் வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரிதின வழிபாடுகளில் பொலிசாரால் கடுமையான குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுவந்தன. இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி தின பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படாமல், சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்திலே சுமூகமாகவும் சிறப்பாகவும் சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
பெருந்திரளான பக்தர்கள் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசை வழிபாடுகளில் பங்கேற்றிருந்ததுடன், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செல்வராசா சுசீலன், தர்மலிங்கம் சுசீலன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளர் ச.தவேந்திரராசா, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வவர் ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் பூபலசிங்கம், செயலாளர் ச.வசந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.


