Friday, February 6, 2026 10:51 am
‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று கண்டியில் நடைபெறவுள்ளது.
புயலினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கைத்தொழிலாளர்களுக்கும், முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று குண்டசாலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
‘டித்வா’ புயல் காரணமாக முழுமையாக வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காகக் காணிகளை வழங்குதல் மற்றும் நட்டஈடு வழங்குதல் என்பன இன்று பிற்பகல் நியங்கொட பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் (A-009) மஹய்யாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகளும் இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நீண்ட காலமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதும் இன்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

