Wednesday, December 24, 2025 11:03 am
குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு Smart Wings விமான நிறுவனம் போலந்து வார்சாவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமானங்களை இயக்கியுள்ளது.
ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடைய விமானம், போலந்தின் வார்சோ (Warsaw) நகரிலிருந்து நேற்று இரவு 10.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன் முதற்கட்டப் பயணத்திற்காக போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்பட்டதோடு , இதில் 180 சுற்றுலாப் பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் வருகை தந்தனர்.
இனிவரும் காலங்களில் 2026 மார்ச் 15 ஆம் திகதி வரை வாரத்திற்கு ஒரு முறை அதாவது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.
இவ்விமானம் மூலம் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகள் , சிகிரியா , கண்டி , நுவரெலியா , தம்புள்ளை மற்றும் யால ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போலந்து சுற்றுலாப் பயணிகளை , இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் சுற்றுலா நிறுவன அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும், இந்த விமான சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


