Monday, September 14, 2026 1:29 pm
இரயில்வே திணைக்களத்தின் அறிக்கை ஒன்றின்படி, பயன்பாட்டில் உள்ள இரயில் என்ஜின்களின் எண்ணிக்கையில் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.மொத்தம் உள்ள 98 என்ஜின்களில் தற்போது 50 மட்டுமே சேவையில் உள்ளன.
சாதாரண இரயில் சேவைகளைத் தொடர குறைந்தது 74 என்ஜின்கள் தேவை என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், 2024-இல் 53 என்ஜின்கள் பயன்பாட்டில் இருந்ததையும், தற்போது அந்தத் திறன் குறைந்துள்ளதையும் அது சுட்டிக்காட்டுகிறது.
முக்கியமாக அலுவலக நேர இரயில் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘பவர் செட்’ (power sets) வாகனங்களிலும் பற்றாக்குறை நிலவுகிறது. மொத்தம் உள்ள 242 பவர் செட்களில், 118 மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன; ஆனால் சேவையைத் தக்கவைக்க 193 பவர் செட்கள் தேவைப்படுகின்றன. 2024-இல் 258 பவர் செட்கள் இருந்த நிலையில், அப்போது 148 பயன்பாட்டில் இருந்தன.
என்ஜின்கள் , பவர் செட்களில் ஏற்படும் கோளாறுகளால் தினசரி இரயில் சேவைகள் இரத்து செய்யப்படுவதற்கும், தாமதங்கள் அதிகரிப்பதற்கும் இந்தப் பற்றாக்குறையே காரணம் என்று இரயில்வே தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இச்சூழ்நிலை குறித்துத் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்கு இரயில்வே பொது முகாமையாளர் (General Manager) உரிய முறையில் பதிலளிக்கத் தவறிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் விளைவாக, 27 இரயில்வே தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. ‘பாதுகாப்பற்ற இரயில்வே கடவை காப்பாளர் சங்கம்’ (Sri Lanka Unprotected Railway Gatekeepers’ Union) இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது; அச்சங்கத்தின் செயலாளர் அனில் குமார நவரத்ன கூறுகையில், தங்கள் குறைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உறுப்பினர்கள் பலமுறை கோரியும் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் முயற்சியாக, தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (14) பிற்பகல் அமைச்சில் நடைபெறவுள்ளது

