Wednesday, June 3, 2026 1:30 pm
தூத்துக்குடியில் சின்னத்திரை , திரைப்பட நடிகை தீபாவின் தந்தையை அரிவாளால் வெட்டிய முத்துராஜ், கார்த்தி, இசக்கி ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம், மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் புலவர் கணேசன் (70). இவரது மகள் தீபா, பிரபல சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலையில், புலவர் கணேசன் முத்தையாபுரம் பஜாரில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
கணேசன் தாக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த நபர் ஒருவர், தடுக்க முயன்றார். ஆனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும் அரிவாளால் தாக்கியது. இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

