Sunday, April 19, 2026 6:10 pm
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் அந்த 234 தொகுதி 233 தொகுதியாக மாறிவிட்டது. அதற்கு காரணம் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டார்.
அவரின் மாற்று வேட்பாளராக அவரின் மனைவி நித்யா அறிவிக்கப்பட்டார். ஆனால் வேட்பு மனு பரிசீலனை நடந்த போது அருண்குமார் வித்யா ஆகிய இருவரின் வேட்பு மனுக்களும் முழுமையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி தேர்தல் அதிகாரிகள் அவர்கள் இருவரின் வேட்பு மனுக்களையும் நிராகரித்தனர்.
அதோடு இது நடந்த அன்று அருண்குமார் தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கும் வரவில்லை. அவரை தவெகவினர் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதையடுத்து தவெக வேட்பாளரை கடத்தி சென்றுவிட்டனர் எனக்கூறி அந்த பகுதி தவெக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜுனா ‘எங்கள் கூட்டத்திலும் ஒரு கருப்பு ஆடு புகுந்துவிட்டது. அது எடப்பாடி பழனிச்சாமியிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓடிவிட்டது’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை கூறியிருப்பதாவது:
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான . கூ. பிரேம்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

