Sunday, September 13, 2026 3:45 pm
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடபெறும் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு அளித்த நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்து போட்டியென்றும் முடிவு எடுத்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளில், மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளுக்கு ஒக்டோபர் 6 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, தவெக ஆகிய பிரதானக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. கூட்டணிக் கட்சிகளும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இத்தொகுதியில் 4 முனைப்போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரிகள் போட்டியிடுவது தேர்தல் களத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது.

