Sunday, May 17, 2026 8:47 pm
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலையில், முதல்வராக வி.டி. சதீசன் நாளை பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைய உள்ள நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் தவெக – காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதால் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், முதல்வர் விஜய்க்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பை ஏற்று விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது முடிவை மாற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் கேரளா செல்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், விஜய் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகவும் தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை கோருவது குறித்தும் விஜய் இந்த சந்திப்பின் போது வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். இந்த டெல்லி பயணத்தின் போது ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்படுகிறது.

