Saturday, April 25, 2026 10:38 pm
`செஸ்` எனும் ஆட்டத்தினைப் பலரும் `சதுரங்கம்` என்றே தமிழில் அழைக்கின்றோம், ஆனால் சதுரங்கம் என்பது தூய தமிழ்ச் சொல்லன்று; இந்த ஆட்டத்துக்கான தமிழ்ச்சொல் `வல்லாட்டம்` என்பதாகும். சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய பழந் தமிழ் நூல்கள் முதல் 17 ஆம் நூற்றாண்டில் (பொ.ஆ 1601-1700) எழுதப்பட்ட `குற்றாலக்குறவஞ்சி` எனும் நூல் வரை, இத்தகைய ஆட்டத்தினை வல்லாட்டம் என்றே குறிப்பிட்டு வந்திருக்கின்றது. கீழடி அகழாய்வு உட்பட, பல தொல்லியல் ஆய்வுகளில் சங்க காலத்தினைச் சேர்ந்த வல்லாட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டமையானது, இந்த ஆட்டத்தின் தோற்றம் தமிழரிடமிருந்தே தோன்றியது என்பதனைச் சான்றுப்படுத்துகின்றது. கண்டியின் இறுதி அரசனான இராசசிங்கன் ஆங்கிலேயரால் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வேலூரில் சிறை வைக்கப்பட்டமை நாம் அறிந்ததே! இவ்வாறு இராசசிங்கன் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்படும் போது, ஆங்கிலேயரின் இசைவு பெற்றுத் தன்னுடன் வல்லாட்டப்பலகையினை எடுத்துச் சென்றமை பலரும் அறியாதது. இன்றும் அந்த வல்லாட்டப்பலகை வேலூர் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தளவுக்குத் தமிழரிடம் வல்லாட்டம் முதன்மை பெற்றுக் காணப்பட்டது.
வல்லாட்டத்தில் தமிழரின் இன்றைய நிலை என்ன? `செஸ்` என்றதுமே எம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது விசுவநாதன் ஆனந்த். இவர் ஐந்து முறை உலக வாகையாளராக வெற்றி பெற்றிருந்தவர். இன்றைய நடப்பு உலக வாகையாளர் குகேசும் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவரே! அதே போன்று சென்ற கிழமை, சைபிரசு நாட்டில் நடைபெற்ற வல்லாட்ட வேட்பாளர் தொடரில் (கன்டிடேற் ரூணமன்ற்) வாகை சூடியவர் வைசாலி என்பதும் தெரிந்ததே! வைசாலி மற்றொரு புகழ் பெற்ற வல்லாட்ட வீரரான பிரக்ஞானந்தாவின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாள்களுக்கு முன், சேர்பியா நாட்டில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான விரைவு வல்லாட்டத்தில் ( Rapid chess ) தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த சர்வாணிகா உலக வாகையாளராக வெற்றி பெற்றிருந்தார். இப்போது இங்கிலாந்து நாட்டுக்கு வருவோம். இங்கிலாந்து நாட்டில், வல்லாட்டத்த் தர வரிசையில் முதல் இருபது இடங்களைப் பெற்ற பெண்கள் பட்டியலினைக் கீழே காண்க .

இப் பட்டியல் அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய பட்டியலாகும். இதில் முதலாவது இடத்தினைப் பிடித்திருப்பது போதனா சிவானந்தன். இச் சிறுமி தனது பதினொரு வயதிலேயே முதலிடம் பெற்றுள்ளார். அதே போன்று நிறந் தீட்டப்பட்டுள்ள அக்சயா கலையழகன், அனுசா சுப்பிரமணியன், சாம்பவி கரிகரன் ஆகியோரும் தமிழர்களே!
வல்லாட்டத்தில் தமிழர் செலுத்தி வரும் ஆதிக்கம் இன்னமும் நீளும், இதற்குக் காரணம் வல்லாட்டமானது தமிழரின் மரபிலேயே கலந்துள்ளது. நீங்களும் உங்களது குழந்தைகளுக்கு வல்லாட்டம் பழக்குங்கள், இந்தாட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் அளப்பெரியவை.

