Tuesday, April 14, 2026 6:38 pm
பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து விவாதிக்க சவூதி அரேபியா, கட்டார் , துருக்கி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்ய உள்ளார் பாகிஸ்தானின் பிரதமர் அஷெஹ்பால்.
முதலில் சவூதி அரேபியாவுக்கான பயணம் என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த இப்பயணம், தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கியத் தலைவர்களுடன் அவசரமான இராஜதந்திர ,பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பகமான வட்டாரங்கள் செவ்வாயன்று ஜியோ நியூஸிடம் தெரிவித்தன.
ஷெஹ்பாஸ் முதலில் சவூதி அரேபியாவுக்கும், அதைத் தொடர்ந்து கட்டாருக்கும் பயணம் மேற்கொண்டு, இறுதியாக துருக்கியில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வார் என்றும், நட்பு நாடுகளுக்கான இந்தப் பயணம் பிராந்திய ஸ்திரத்தன்மை, தற்போதைய இராஜதந்திர முன்னேற்றங்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமர், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க உள்ளார், அங்கு இரு தரப்பினரும் முக்கிய இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
பிராந்தியத்தின் நிலவரங்கள் தொடர்ந்து பதட்டங்களை ஏற்படுத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள நிலைமை மற்றும் அடுத்தகட்ட அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் குறித்து நட்பு நாடுகளுடன் கலந்தாலோசனைகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்படுவதால், அது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

