Wednesday, October 21, 2026 7:46 pm
ஹல்துமுல்லாவில் தபால்காரர் ஒருவரின் படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,078 விநியோகிக்கப்படாத கடிதங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரின் வீட்டில், சொரகுனே, ஹரங்கஹாவாவில் அக்டோபர் 20 ஆம் திகதி பொலிஸார் நடத்திய சோதனையின் போது அவை மீட்கப்பட்டன.
42 வயதான அந்த சந்தேக நபர் சொரகுனே துணை தபால் அலுவலகத்தில் பணிபுரிகிறார். கள்ளச்சாராயம் உள்ளதா என பொலிஸ் குழுவினர் அவரது இல்லத்தில் சோதனையிட்டபோது, கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,065 சாதாரண கடிதங்கள் , 13 பதிவுத் தபால்கள் என்பன அடங்கிய ஒரு பையைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையின்போது, ஹல்துமுல்ல, சொரகுனே ஹரங்கஹாவ பகுதிகளில் விநியோகத்திற்காகத் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதங்களை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது இல்லத்தில் மறைத்து வைத்திருந்ததாக அந்தச் சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அரச நிறுவனங்களால் அனுப்பப்பட்ட முக்கிய ஆவணங்கள், நீதிமன்ற ஆவணங்கள், சட்ட அறிவிப்புகள், வேலை நேர்காணல் கடிதங்கள் ,பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட பிற உத்தியோகபூர்வ கடிதப் போக்குவரத்து ஆகியவை அந்தக் கடிதங்களில் அடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தபால் ஊழியராகப் பணியாற்றியபோது தனது கடமைகளைப் புறக்கணித்தல் ,தபால்களை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அந்தத் தபால்காரர் கைது செய்யப்பட்டார்.

