Wednesday, May 20, 2026 3:44 pm
“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல கட்சி மாறி மாறி வந்தவர். அதிமுகவிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டவர். பதவி கொடுக்காததால் தான் அவர் தவெகவில் இணைந்தார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அதிமுகவில் ஒரு பிரிவு தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால், அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திமுகவையும், அதிமுகவையும் இணைந்து அவதூறான கருத்தை தெரிவித்து வருகிறார். அவருடையை அரசியல் காலத்தை பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும். அவர் எத்தனை கட்சிகள் மாறி மாறி வந்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பணியாற்றினார். திமுகவில் இருந்தார். அதற்குப் பின்னால் அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கேட்டார். ஆனால் இதெல்லாம் மறுக்கப்பட்ட காரணத்தால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.
தற்போது ஆதவ் அர்ஜுனா திமுக – அதிமுகவை தொடர்புபடுத்தி அவதூறான செய்திகளைச் சொல்லி வருகிறார். ஆதவ் அர்ஜூனா கூறும் தகவலை முற்றிலுமாக மறுக்கிறோம்.
அதிமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களுடன் குதிரை பேரத்தை நடத்திவிட்டார்கள். அதனை மூடி மறைக்க எடப்பாடி பழனிசாமி மீது அவதூறான கருத்துகளைச் சொல்லி வருகிறார்” என ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

