Friday, September 25, 2026 6:00 pm
81-வது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் உரையாற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேடைக்கு வந்தபோது, ஏராளமான பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் வளர்ந்து வரும் விமர்சனங்கள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும், காசா மற்றும் இப்பிராந்தியத்தின் பிற பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் நெதன்யாகு தனது உரையை அமைத்திருந்தார்.
காசாவில் இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இஸ்ரேலிய பிரதமர், “இஸ்ரேல் இனப்படுகொலையைச் செய்யவில்லை; மாறாக, இஸ்ரேல் இனப்படுகொலையைத் தடுத்தது” என்று கூறினார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் “யூத-எதிர்ப்பு கும்பல்களுக்கு அடிபணிந்துவிட்டன” என்றும், இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்க மறுத்துவிட்டன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நெதன்யாகு பேசத் தொடங்கியதும்,அதிகமான பிரதிநிதிகள் வெளியேறினர்; இதனால் அரங்கில் ஏராளமான இருக்கைகள் காலியாகக் காணப்பட்டன.
இஸ்ரேல் குறித்துப் பொய்களைப் பரப்புவதாகத் தனது விமர்சகர்கள் மீது குற்றம் சாட்டிய நெதன்யாகு, வெளிநடப்பு செய்த பிரதிநிதிகளை “அறநெறி சார்ந்த கோழைகள்” என்று அழைத்தார்.
முன்னதாக, பாலஸ்தீன மக்களின் இருத்தலே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ‘இரு-நாடு தீர்வு’ (two-state solution) கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பொதுச் சபையில் தெரிவித்தார்.
முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் உலகத் தலைவர்களிடம் உரையாற்றிய அவர், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் கொலை, அழிவு, பட்டினி, கட்டாய இடப்பெயர்வு முயற்சி மற்றும் “இனப்படுகொலைக்கான போர்” ஆகியவற்றிற்கு ஆளாக்கப்படுவதாகவும், அதே வேளையில் மேற்குக் கரையில் குடியேற்ற விரிவாக்கம் துரிதப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
“இந்த ஆபத்து என்பது இரு-நாடு தீர்வைச் சிதைப்பதோடு அல்லது பாலஸ்தீன அரசு அமைவதை தடுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை; இது பாலஸ்தீன மக்களின் இருத்தலையே அச்சுறுத்துகிறது,” என்று அப்பாஸ் கூறினார்.
“‘பெரிய இஸ்ரேல்’ (Greater Israel) என்று அழைக்கப்படுவதை உருவாக்க, இஸ்ரேலிய தீவிரவாதம் தனது காலனித்துவத் திட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது,” என்று அவர் எச்சரித்தார். இரு-அரசுத் தீர்வைப் பாதுகாப்பதற்கு மேலும் வலுவான சர்வதேச முயற்சிகள் தேவை என்று அப்பாஸ் அழைப்பு விடுத்தார். மேலும், “இராணுவ ஆக்கிரமிப்போ அல்லது குடியேற்றவாசிகளின் பயங்கரவாதமோ அந்தத் தீர்வுக்கு வழிவகுக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பாலஸ்தீனப் பிரதிநிதிகள் குழுவிற்கு விசாக்களை மறுத்த அமெரிக்காவின் முடிவை அவர் விமர்சித்தார். மேலும், பாலஸ்தீனத்திற்கு எதிரான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் நீக்குமாறு வாஷிங்டனைக் கேட்டுக்கொண்டார்.
இஸ்ரேலியக் குடியேற்றப் பகுதிகளிலிருந்து வரும் பொருட்களைத் தடை செய்த நாடுகளுக்கு அப்பாஸ் நன்றி தெரிவித்தார். மேலும், பாலஸ்தீனப் பிரதேசம் இணைக்கப்படுவதைத் தடுப்பதற்கான தனது உறுதிமொழியை வாஷிங்டன் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் எங்கள் தாயகத்தை விட்டு வெளியேற மாட்டோம், இடம்பெயர்வை ஏற்க மாட்டோம், எங்கள் சார்பாக எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூ றினார்.
ஐ.நா தலைமையகத்திற்கு வெளியே, நெதன்யாகுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும், பாலஸ்தீன மக்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்காகவும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

