Saturday, November 14, 2026 4:58 pm
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களின் தகவல் தொடர்பு அமைப்பில் கடந்த 13 ஆம் திகதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 10,500 விமானங்கள் தாமதமாகியுள்ளன; 2,700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 15 லட்சம் பயணிகள் தத்தளித்தனர்.
அமெரிக்காவின் விமானப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (Federal Aviation Administration – FAA) அமைப்பின் தகவல் தொடர்புக் கட்டமைப்பில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்கா முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல மணிநேரங்களாக முடங்கிக் கிடந்த அமெரிக்க வானப்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மைக்ரோசொஃப்ட் (Microsoft) தொழில்நுட்பச் செயலிழப்புக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், இதுவொரு இணையவழித் தாக்குதல் அல்ல எனவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

