Sunday, May 17, 2026 6:15 am
வட இலங்கையின் வேலணைத் தீவுப் பகுதியில் இற்றைக்கு ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித வாழ்வுக்கான சான்றுகள் கண்டுபிடிப்பு, வரலாற்று முகன்மையான அகழாய்வுச் சான்று;
வேலணையில் முனைவர் திலங்க சிரிவர்த்தனவும் அவரது குழுவும் மேற்கொண்ட அகழாய்வில் வரலாற்று முகன்மையான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. முன்னர் ஆய்வாளர்கள் வட இலங்கையில் பொ.ஆ.மு 500 (BCE 500) இற்கு முன்னர் மனிதர் குடியேறியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதினர். வட இலங்கையின் வறண்ட சூழல், குறைந்த நீர் வளம், கமம் செய்வதற்கான சூழலின்மை போன்ற பல காரணங்களைக் கொண்டு பொ.ஆ.மு ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே வட இலங்கையில் மக்கள் குடியேறியதாகக் கருதப்பட்டது. இக் கருத்தே இப்போதைய அகழாய்வுச் சான்றின் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மனிதர்கள் உணவுக்காகப் பயன்படுத்திய சிப்பி, நத்தை ஓடுகளில் காணப்பட்ட கரிமத்தினைக் கரிமச் சோதனைக்கு அனுப்பியதில் ( c-14 ரேடியோ கார்பன்) அவற்றின் காலக்கணிப்பினை நெதர்லாந்திலுள்ள ஆய்வகம் ஒன்று (University of Groningen) கணித்துள்ளது. அக் கணிப்பின் படி, வேலணையில் தற்போதுள்ள காலத்துக்கு (BP 3460) 3460 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர் வாழ்ந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் இங்கு வாழ்ந்த மக்கள் மேம்பட்ட கடலுணவு தேடும் முறைகளைப் பயன்படுத்தும் திறன், கடற்செலுத்துகைத் திறன் (seafaring skills), மேம்பட்ட வாழ்க்கைத் திறன் என்பவற்றினைக் கொண்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது. ஆய்வு தொடருகின்றது.

