Friday, September 25, 2026 5:49 pm
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விண்வெளியில் விரிவுபடுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் தனது முதல் செயற்கைக்கோளை அடுத்த வாரம் விண்ணில் செலுத்தவுள்ளது.
‘புராஜெக்ட் சன்செட்சர்’ என்ற நீண்டகால ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிநவீன TPU சிப்களைச் சுமந்து செல்லும் இந்தச் செயற்கைக்கோள் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மூலம் குறைந்த புவி வட்டப்பாதைக்கு அனுப்பப்படவுள்ளது.
பூமியில் ஏஐ தரவு மையங்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் நீரின் தேவையைத் தவிர்க்க விண்வெளியில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி கணினித் திறனை மேம்படுத்த முடியுமா என்பது குறித்து இந்தச் சோதனையின் மூலம் ஆராயப்படவுள்ளது.
விண்வெளியில் ஏஐ தரவு மையங்களை அமைக்கும் கூகுளின் இந்த முயற்சிக்கு எலான் மஸ்க் வரவேற்பு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக் கணினி வளங்களும் விண்வெளியை நோக்கியே நகரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், விண்வெளியில் நிலவும் தீவிரக் கதிர்வீச்சு, உச்சப்பட்ச வெப்பம் மற்றும் ராக்கெட் ஏவுதலின் அதிர்வுகளைக் கூகுளின் TPU சிப்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதை இந்தச் சோதனை மூலம் அறிய முடியும். இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக 2027-ஆம் ஆண்டில் இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்துச் சோதிக்கவும் கூகுள் திட்டமிட்டுள்ளது.

