Wednesday, September 2, 2026 11:17 pm
எல் நினோ (El Niño) தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், இலங்கையின் கடல் சூழலியல் அமைப்பு, மீன்வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்காக, விரிவான தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) ஆரம்பித்துள்ளது.
இந்த ஆய்வுப் பணிகள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுகளின் கீழ், கடல் நீரின் வெப்பநிலை, கடல் நீரோட்டங்கள், மீன் இனங்களின் பரவல் மற்றும் இடம்பெயர்வு, மீன் வளத்தின் அதிகரிப்பு மற்றும் குறைவு உள்ளிட்ட பல்வேறு கடல்சார் தரவுகள் தொடர்ச்சியாகச் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
தற்போது நாட்டில் காணப்படும் மீன் விலை உயர்வுக்கு ‘எல் நினோ’ நிலைமை காரணமாக இல்லை என நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய மீன் விலை உயர்வையும், ‘எல் நினோ’ காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்ப்பது சரியானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ‘எல் நினோ’ நிலைமை காணப்படுவதாக உறுதிப்படுத்துவதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இதுவரை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ‘எல் நினோ’ காரணமாக நாட்டில் மீன் வளம் குறைந்து வருவதாகக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘எல் நினோ’ தொடர்பான இந்த ஆய்வுகள், எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்களினால் கடல் சூழலியல் அமைப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை விஞ்ஞான ரீதியாக மதிப்பிட்டு, அவற்றை எதிர்கொள்வதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

