Friday, May 22, 2026 3:19 pm
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விரைவில் டெல்லி செல்லவிருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. எனினும், அவரது பயணத்திற்கான அதிகாரப்பூர்வத் திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பெறுவது தொடர்பாக ஆலோசிக்க உள்ளார்.
டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான ஆரம்பகட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன. தமிழக அரசின் சார்பில், பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு முதலமைச்சரின் சந்திப்பிற்கான நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி தற்போது பல்வேறு அரசு முறை நிகழ்வுகளிலும், அரசியல் பணிகளிலும் மிகவும் பிஸியாக இருப்பதால், தமிழக அரசின் இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையிலேயே இருப்பதாகத் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் நேரம் கிடைத்தவுடன், பயணத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், ஒருபுறம் பாஜாக தலைமையிலான மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியைப் பெறப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், மறுபுறம் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி , மல்லிகார்ஜுன கார்கே போன்றோரைச் சந்திக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இந்த முரண்பாடான சந்திப்புகள் மற்றும் கூட்டணி அரசியல் நகர்வுகள், டெல்லி அரசியல் வட்டாரத்திலும் தமிழகத்திலும் புதிய விவாதங்களையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

