Monday, May 25, 2026 2:33 pm
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட அதிரடி ஆய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் வளாகத்தில் பிரசாதம் விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்தபோது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிரசாத பொட்டலங்களில் தயாரிப்பு திகதி,காலாவதி திகதி போன்றவை குறிப்பிடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. பக்தர்களின் ஆரோக்கியத்தில் விளையாடும் இத்தகைய அலட்சியமான செயல்பாட்டை பார்த்த அமைச்சர், சம்பந்தப்பட்ட கடை ஊழியர்களிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
கோயிலுக்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் வாங்கும் பிரசாதத்தில், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாதது நிர்வாக சீர்கேட்டிற்கு சான்றாகும். தரமற்ற அல்லது காலாவதியான பொருட்களை பக்தர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனை உணர்த்தும் வகையில், உடனடியாக சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தவும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இனி வரும் காலங்களில், ஒவ்வொரு பிரசாத பொட்டலத்திலும் தெளிவான விவரங்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

