Sunday, November 1, 2026 9:01 pm
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 51.5 சதவீதம் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 30 ஆம் திகதியிட்ட மத்திய வங்கியின் சமீபத்திய ‘வெளிப்புறத் துறைச் செயல்பாடு’ அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 4.49 பில்லியன் அமெரிக்க டொலரைச் செலவிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தச் செலவு 2.96 பில்லியன் டொலராக இருந்தது.
இருப்பினும், செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு சற்று குறைந்துள்ளது. அந்த மாதத்தில் இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக 415.1 மில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளது; இது 2025 செப்டம்பரில் செலவிடப்பட்ட 440.7 மில்லியன்டொலரை விட 5.8 சதவீதம் குறைவாகும். 2026 செப்டம்பர் மாதம், தொடர்ந்து ஐந்தாவது மாதமாக எரிபொருள் இறக்குமதிச் செலவு குறைந்த மாதமாகவும் பதிவாகியுள்ளது.
இந்தக் குறைவு போக்கு இருந்தபோதிலும், ஒட்டுமொத்த எரிபொருள் இறக்குமதிச் செலவு முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட கணிசமாக அதிகமாகவே உள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்ந்த சூழலில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளிட்ட உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலித் தடைகள், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியதுடன், சரக்குக் கட்டணம் மற்றும் காப்பீட்டுச் செலவுகளையும் அதிகரித்துள்ளன.

