Saturday, October 31, 2026 10:12 pm
இத்தாலியில் கடந்த வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான மக்கள், பெரும்பாலும் மாணவர்கள் தொழிலாளர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கிப் போராடினர். ஊதிய உயர்வு, வலுவான பொதுச் சேவைகள், வாழ்க்கைச் செலவு உயர்வு எதிர்ப்பு , இராணுவச் செலவின அதிகரிப்புக்கு எதிரான கண்டனம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.
அடிப்படைத் தொழிலாளர் சங்கமான ‘யூனியோன் சிந்தகாலே டி பேஸ்’ 24 மணிநேர பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது; இதையொட்டி 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இம்முறை போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் அமைந்தன, இருப்பினும் சில இடங்களில் பதற்றம் நிலவியது.
துரின் நகரில், மாகாண நிர்வாகக் கட்டிட தடுப்புகளை நெருங்க முயன்ற மாணவர்கள் , இடதுசாரி ஆர்வலர்களை விரட்ட, பொலிஸார்ர் தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களைப் பயன்படுத்தினர்.
ரோமில், கொலோசியம் (Colosseum) அருகே ஒரு பெரிய பேரணி நடைபெற்றது. அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்கள், வார இறுதி முழுவதும் அங்கேயே தங்குவதற்காகக் கூடாரங்களை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தனர். சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் வீதிகளின் குறுக்கே வைக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. மாலை வேளையில், ஒரு பெரிய குழு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்றது; அவர்களைக் கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களைப் பயன்படுத்தினர் என்று இத்தாலிய செய்தி நிறுவனமான ‘அன்சா’ தெரிவித்துள்ளது.பொலிஸ் தடுப்புகளைத் தொடர்ந்து உடைக்க முயன்ற எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மிலன் நகரில், போராட்டக்காரர்கள் நகரத்தின் சுற்றுச் சாலையில் பேரணியாகச் சென்று, இறுதியில் ‘பாலிடெக்னிகோ டி மிலானோ’ பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போராட்டத்தை முடித்தனர். போராட்டக்காரர்கள் தீப்பந்தங்களை ஏந்திச் சென்றதுடன், சில பொருட்களை எரித்தனர்.
ஜெனோவா (Genoa) துறைமுகத்தில் சுமார் 15,000 துறைமுகத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பிற போராட்டக்காரர்கள் நுழைந்தனர். ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஏற்றிச் செல்ல துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர். மேலும், வளைகுடா முதல் கருங்கடல் வரை பல்வேறு மோதல் பகுதிகளில் மாலுமிகள் உயிரிழக்கும் அவலத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வாழ்க்கைச் செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு குறைகளை முன்வைத்து, பிரான்ஸ், ஸ்பெய்ன், பெல்ஜியம் , அல்பேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் போராட்ட அலைகள் பரவியுள்ளன.

