Tuesday, May 19, 2026 8:01 pm
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அச்சுறுத்தல் , நாய் கடி சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் இன்று ஒரு மிக முக்கியமான,வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட மற்றும் குணப்படுத்த முடியாத அளவிற்கு தீவிர ஆக்ரோஷத்துடன் இருக்கும் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா , என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, பொது இடங்களில் தெருநாய்களின் நடமாட்டம் தற்பொழுது ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தெருநாய்களால் மிக கொடூரமாக தாக்கப்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள் , சட்டப்பூர்வ நெறிமுறைகள் ஆகியவறைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தெருநாய்களை பொது இடங்களிலிருந்து அகற்றி காப்பகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற தனது முந்தைய உத்தரவை மாற்றியமைக்க மறுத்துவிட்டது. மேலும், மருத்துவமனைகள், பூங்காக்கள் மற்றும் இரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதற்கான தடையையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

