Monday, May 18, 2026 9:11 pm
தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களைப் புதுப்பித்துச் சீரமைக்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள் , நகராட்சிகள் ஆகியவற்றின் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
அம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த சமூக நலத் திட்டமாகும்.
2013-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் சென்னை மாநகராட்சியில் முதன்முதலில் தொடங்கி வைக்கப்பட்டது. தினக்கூலிகள், அடித்தட்டு மக்கள், ஆதரவற்றோர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்கள் பசியின்றி வாழ வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இந்த உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது.
திமுக ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகங்களில் உணவின் தரம் சரியில்லை என்றும் அவற்றை சரியாக பராமரிப்பதில்லை என்றும் அதிமுக குற்றம் சாட்டி வந்தது. பொதுமக்கள் மத்தியிலும் இது எதிரொலித்தது.

