Tuesday, April 28, 2026 2:16 pm
ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமாகிவிட்டார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இன்று தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
துயரங்களையும், விடுதலையின் அவசியத்தையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பாடி, கலை மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழர் தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய பாடல்களின் ஒரு தனித்துவ புரட்சி குரலாக இருந்த இவர் சி.பா. ஆதித்தனார் 1950களில் ஆரம்பித்த நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து, தமிழின எழுச்சி இசைப் பாடல்களை பாடிய செல்லப்பாவுக்கு அன்று ஆதித்தனார் தேனிசை செல்லப்பா என்ற அடையாளத்தை பட்டமாக வழங்கியிருந்தார்.
1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். யாழ்கோட்டை மைதானத்தில் நடந்த முத்தமிழ் விழாவில் அவரது கச்சேரி நடைபெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொண்டனர்.
இவ்வுலகை விட்டுப் பிரிந்த தேனிசை செல்லப்பாவினுடைய உடல் வஞ்சுவாஞ்சேரி – படப்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

