Wednesday, July 1, 2026 11:23 am
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் வேகமும் விவேகமும் கொண்ட அணிகளில் முதன்மையாக பிரான்ஸ் அணி இடம்பெற்றுள்ளது.
முதல் சுற்றில் நோர்வே செனகல் ஈராக் ஆகிய 3 அணிகளையும் இலகுவாக வெற்றிகொண்டு 32 அணிகள் சுற்றுக்கு பிரான்ஸ் முன்னேறியது.
முன்னாள் சம்பியன் பிரான்ஸுக்கும் சுவீடனுக்கும் இடையிலான 32 அணிகள் சுற்று நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் இன்று அதிகாலை ஆரம்பமானது.
இன்றைய போட்டியில் கிலியான் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் வெற்றி பெற்று முன்னோடி கால் இறுதிக்கு முன்னேற முயற்சிக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு போன்றே எம்பாவேயின் அதிரடியான ஆட்டத்தால் பிரான்ஸ் அணி சுவிடனை வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. கிலியன் எம்பாப்பேயின் உதவியுடன் இன்று பெற்ற வெற்றியுடன் பிரான்ஸ் அணி 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஒரு போட்டியில் வெற்றி, ஒரு தோல்வி, ஒரு சமநிலை என மூன்றாம் இடத்தைப் பெற்ற அணிகளில் ஒன்றாக 32 அணிகள் சுற்றுக்குள் நுழைந்த சுவீடனும் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பிரான்ஸை எதிர்கொண்டது.
இன்றைய போட்டியில் பிரான்ஸ் அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் சுவீடனைத் தோற்கடித்தது.
இன்றைய போட்டியில் எம்பாப்பே இரட்டை கோல்களைப் பதிவு செய்தார். போட்டியின் முதலாவது பாதி முடிவடைவதற்கு முன்னர் எம்பாப்பே பிரான்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். 53ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா இரண்டாவது கோலை அடித்தார். 74ஆவது நிமிடத்தில் மீண்டும் அதிரடி காட்டிய எம்பாப்பே இன்றைய தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். இந்த இமாலய வெற்றிக்கு பிரான்ஸ் அணியின் நட்சத்திரத் வீரர் கிலியன் மப்பே காரணமாக அமைந்தார்.
இதேவேளை உலகக் கிண்ண நொக்-அவுட் சுற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் கிலியன் எம்பாப்பே தன்வசப்படுத்தியுள்ளார். கிலியன் எம்பாப்பே 10 கோல்களுடன் முன்னிலையில் இருக்கின்ற அதேவேளை லியோனிடாஸ், ரொனால்டோ மற்றும் பீலே போன்ற கால்பந்து உலக ஜாம்பவான்களையும் முந்தியுள்ளார் என்பதும் குறிப்பிடவேண்டியதொன்றாகும்.
2026 பீபா உலகக் கிண்ணத் தொடரில் எம்பாப்பே இதுவரை 6 கோல்களைப் பதிவு செய்துள்ளார். ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களில் லியோனல் மெஸ்ஸி நிலைநாட்டியிருந்த சாதனையையும் சமன் செய்துள்ளார். அதுமட்டுமன்றி உலகக் கிண்ண வரலாற்றில் எம்பாவேயின் ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் லியனல் மெஸ்ஸியின் 19 கோல்கள் சாதனைக்கு மிக அருகில் எம்பாப்பே நெருங்கியுள்ளார்.
பிரான்ஸ் அணி தனது இறுதி 16 சுற்றுப் போட்டியில் பராகுவே அணியுடன் மோதவுள்ளது. பிரான்ஸ் அணியின் இந்த அதிரடி ஆட்டம் அடுத்த சுற்றில் அவர்களை எதிர்கொள்ளக் காத்திருக்கும் அணிக்கு இப்போதே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். பிரான்ஸ் அணி வீரர்களிடம் எந்தப் பதற்றமும் தெரியவில்லை. போட்டி ஆரம்பித்தது முதல் இறுதி நொடி வரையில் களைப்பின்றி அதே வேகத்தோடு ஆட்டத்தை தங்களின் கால்களுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இதேவேளை உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றின் கீழ் 5ஆவது போட்டி நேற்று ஐவரி கோஸ்ட் மற்றும் நோர்வே அணிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டியின் முதலாவது பாதியின் இறுதிவரை இரு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியாமல் போனது. முதலாவது பாதி நிறைவடைவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னர் நோர்வே அணிக்காக அன்டோனியோ நுசா முதல் கோலை பதிவுசெய்தார். 1க்கு 0 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி முன்னிலை பெற்றவாறு முதலாவது பாதி நிறைவடைந்தது.
போட்டியின் இரண்டாவது பாதி நிறைவடைவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்னர் ஏர்லிங் ஹாலண்ட் நோர்வே அணிக்காக இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்து அந்த அணியை இறுதி 16 சுற்றுக்கு அழைத்துச் சென்றார். 2க்கு 0 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி இப்போட்டியில் வெற்றியைப் பதிவு செய்தது. நோர்வே அணி அடுத்த சுற்றில் பிரேசில் அணியுடன் போட்டியிடவுள்ளது.
நோர்வே அணி உலகக் கிண்ணக் கால்பந்து தொடரொன்றில் நொக்-அவுட் போட்டி ஒன்றில் வெற்றியீட்டிய முதலாவது சந்தர்ப்பமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

