Saturday, November 14, 2026 3:29 pm
வங்காள விரிகுடாவில், மட்டக்களப்பிற்கு கிழக்கே சுமார் 650 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், இந்த வளிமண்டல அமைப்பு வடமேற்கு திசையை நோக்கி, இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து விலகிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த அமைப்பின் தாக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல் , வடமேல் ஆகிய மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
வடக்கு , கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், ஊவா, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

