Friday, September 25, 2026 5:53 pm
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள விஐபி கார்டன் பகுதியில் பிரபல யூடியூபர் தம்பதியின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வினோத்குமார் , மதுமிதா தம்பதி சமூக வலைதளங்களில் பிரபலமான யூடியூபர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் குடும்ப வாழ்க்கை , பல்வேறு நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தங்களிடம் இருந்த நகைகள் பணம் அன்பனவற்றை வீடியோக்களில் வெளிப்படையாகக் காட்டி வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்களது வீட்டில் அதிக அளவிலான நகைகள் இருப்பதை அறிந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதில் மொத்தம் சுமார் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொள்ளை நடைபெற்ற விஐபி கார்டன் பகுதியில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கொள்ளையர்கள் வீட்டின் பின்புறம் வழியாக நுழைந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகியுள்ள தடயங்கள் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

