Tuesday, August 11, 2026 1:27 pm
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கேஹர் சிங்கின் மகன் சாத்வந்த் சிங் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகாலி தளம் வாரிஸ் பஞ்சாப் டீ என்ற கட்சி அவரை முதல் வேட்பாளராக அறிவித்துள்ளது.
பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளன.
அகாலி தளம் வாரிஸ் பஞ்சாப் டீ என்ற கட்சியை சேர்ந்த செயல் தலைவர் தர்செம் சிங் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”பஞ்சாப்பிற்காக தியாகம் செய்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் முதல் வேட்பாளர் அறிவிக்கப்படுகிறது. பாசி பதனா சட்டசபை தொகுதியின் வேட்பாளராக சாத்வந்த் சிங் போட்டியிடுகிறார். தேர்தல் சார்ந்த கணக்கீடுகளால் மட்டுமே கட்சி செயல்படுவத இல்லை. பந்திக் (Panthic) கொள்கைகள், பஞ்சாபின் உரிமைகள் மற்றும் பஞ்சாப்பிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும வகையில் தான் நம்முடைய அரசியல் வேரூன்றி உள்ளது” என்றார்.

