Wednesday, July 15, 2026 11:20 am
கால்பந்து திருவிழாவான பீபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் பரபரப்பான ஆட்டங்களுடன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. 2026 பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரின் அரை இறுதிப்போட்டிக்கு ஆர்ஜன்டீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நான்கு அணிகள் முன்னேறியிருந்தது.
இந்த நான்கு அணிகளும் அரை இறுதிகளில் விளையாடுவதால் 23ஆவது பீபா உலகக் கிண்ண அத்தியாயத்தில் புதிய ஓர் அணி சம்பியனாகும் வாய்ப்பு இல்லாமல் போனது.
சம்பியன் பட்டத்தை ஆர்ஜன்டீனா தக்கவைத்தால் அவ்வணி நான்காவது உலக சம்பியன் பட்டத்தை சூடிக்கொள்ளும். பிரான்ஸ் 3ஆவது தடவையாக சம்பியனாவதற்கு முயற்சிக்கும். இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகிய இரண்டு நாடுகளும் இரணடாவது தடவையாக சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரை இறுதிப்போட்டி ஆரம்பமானது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட பலவான்களும் முன்னாள் உலக சம்பியன்களுமான பிரான்ஸுக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான முதலாவது பீபா உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டி டலாஸ் விளையாட்டரங்கில் இன்று அதிகாலை ஆரம்பமானது. இந்த இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிக்கு முன்னேறின.
பிரான்ஸ் சார்பாக இந்த உலகக் கிண்ணத்தில் 8 கோல்களைப் போட்டுள்ள அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே, அதிசிறந்த ஆற்றல்களைக் கொண்ட உஸ்மான் டெம்பெல், மைக்கல் ஒலிஸ், டிசயர் டூவ், ப்றட்லி பார்க்கோலா ஆகியோர் மத்திய மற்றும் முன்களத்திலும் டேயொட் உப்பாமெக்கானோ, வில்லியம் சலிபா ஆகியோர் பின்களத்திலும் மானு கோன், ஏட்றியன் ரேபியோட் மத்திய மற்றும் பின்களத்திலும் அசாத்திய திறமையை வெளிப்படுத்திவந்துள்ளனர். பிரதான கோல்காப்பாளர் யாசின் பூனு இரும்புத்தூணாக இருப்பது பிரான்ஸுக்கு மேலும் பலத்தைக் கொடுக்கிறது.
ஸ்பென் அணி கோல் காப்பாளர் யூனய் சிமோன் இந்த உலகக் கிண்ணப் போட்டி முழுவதும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பல கோல்களைத் தடுத்து நிறுத்தியதுடன் ஒரே ஒரு கோலை மாத்திரமே விட்டுள்ளார்.
ரொட்றி, பெட்றி, டெனி ஒல்மோ ஆகியோர் மத்திய களத்தில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
ஆய்மெரிக் லாபோர்ட், பாவ் கியூபாசி, மார்க் கியூகியூரெல்லா, பெட்ரோ போரோ ஆகியோர் பின்களத்தில் மிகக் கட்டுப்பாட்டுடன் விளையாடி மத்திய மற்றும் முன்கள வீரர்களுக்கு பந்தை சிறப்பாக பரிமாறி வருகின்றனர்.
லாமின் யாமல், நிக்கோ வில்லியம்ஸ், மைக்கல் ஓயார்ஸபால் ஆகிய மூவரும் முன்களத்தில் வேகமாக நகர்ந்து கோல் போடுவதில் வல்லவர்களாக இருக்கின்றனர்.
எனவே இத்தகைய சிறந்த வீரர்கள் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதால் இப் போட்டி ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என்பது உறுதியானது.
இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2026 பீபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி ஆரம்பமானது. இந்தப்போட்டியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி அதிரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஸ்பெயின் போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மிகேல் ஓயர்ஸபால் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 58 ஆவது நிமிடத்தில் டேனி ஓல்மோவின் உதவியுடன் பெட்ரோ போரோ இரண்டாவது கோலை அடித்து ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார். நடப்புத் தொடரில் பிரான்ஸ் அணி முதல்முறையாக எந்தவொரு கோலையும் பெறாமல் பின்தங்கியமை இந்தப் போட்டியில் தான்.
ஸ்பெய்ன் தனது உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருப்பது இது இரண்டாவது தடவையாகும்.
அரை இறுதிப் போட்டியிலும் ஆரம்பக் கட்டத்தில் பிரான்ஸ் சிறப்பாக விளையாடிய போதிலும் நேரம் செல்ல செல்ல ஸ்பெய்ன் ஆட்டத்தை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தது. போட்டியின் 22ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் லூக்கஸ் டைஞே தனது பெனல்டி எல்லையில் 19 வயதான லாமின் யமாலின் தொடைப் பகுதியை விதிகளுக்கு முரணான வகையில் பூட்ஸ் காலால் தாக்கியதால் ஸ்பெய்னுக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
ஏனைய போட்டிகளில் போன்று பிரான்ஸினால் இந்தப் போட்டியில் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த வெற்றியை அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவை அல்லது முன்னாள் சம்பியன் இங்கிலாந்தை ஸ்பெய்ன் சந்திக்கும்.
நியூ யோர்க் நியூ ஜேர்ஸி விளையாட்டரங்கில் எதிர்வரும் 19ஆம் திகதி பீபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

