Tuesday, July 14, 2026 4:34 pm
கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்றைய தினம் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் ஊடாகக் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் பாயும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாகக் கரை திரும்பிய நிலையில், மாணவன் ஒருவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டு , நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை நேற்று கண்டறிய முடியவில்லை.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (14) நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளின்போதே காணாமல் போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன், லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

