Tuesday, July 14, 2026 1:08 pm
நண்பர்களுடன் குளிக்க சென்று காணாமல் போன மாணவனை இரண்டாவது நாளாக இன்று (14) அவரது உடல் தேடும் பணி முன்னெடுக்கபடுகிறது.
லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனை தொடர்ந்து தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை கண்டறிய முடியவில்லை. போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நேற்று திங்கட்கிழமை (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில் , பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணாமல் போன மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை காவல்துறையினரும், பிரதேச மக்களும் இணைந்து இரண்டாவது நாளாக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

