Friday, July 10, 2026 12:24 pm
இறுதிக்கட்டத்தை நெருங்கும் 2026 பீபா உலகககிண்ண கால்பந்தாட்டத் தொடர் விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. 8 நாடுகளுடன் காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இந்தப்போட்டித் தொடரில் முன்னாள் சம்பியன் பிரான்ஸ் மொரோக்கோவை எதிர் கொண்டது.
கால் இறுதிப் போட்டி பொஸ்டன் பொக்ஸ்பரோ விளையாட்டரங்கில் இன்று அதிகாலை ஆரம்பமானது. நான்கு வருடங்களுக்கு முன்னர் கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியின் மறுபோட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. 2022ம் ஆண்டு இந்த இரண்டு அணிகளும் கத்தாரில் அரை இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டபோது போட்டியின் ஆரம்பத்திலும் பிற்பகுதியிலும் போடப்பட்ட கோல்களின் உதவியுடன் பிரான்ஸ் 2 – 0 என வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவிடம் பெனல்டி முறையில் பிரான்ஸ் தோல்வி அடைந்து உப சம்பியனானது.
நான்கு வருடங்களின் பின்னர் இந்த வருட உலகக் கிண்ணத்தில் பிரான்ஸ் அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி வருகின்றது. முதல் சுற்றில் செனகல், ஈராக், நோர்வே ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்ட பிரான்ஸ் 32 அணிகள் சுற்றில் சுவீடனை 3 – 0 என வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. 16 அணிகள் சுற்றில் பரகுவேயிடம் கடும் சவாலை எதிர்கொண்ட பிரான்ஸ் போட்டியின் 70ஆவது நிமிடத்தில் கிலியான் எம்பாப்பே போட்ட பெனல்டி கோலின் மூலம் வெற்றியை ஈட்டி கால் இறுதிக்கு முன்னேறியது.
மறுபுறத்தில் ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுடனான தனது ஆரம்பப் போட்டியை 1 – 1 என மொரோக்கோ வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்தின் சவாலை முறியடித்த மொரோக்கோ 1 – 0 என வெற்றியை ஈட்டியதுடன் கடைசிப் போட்டியில் ஹெய்டியை 4 – 2 என இலகுவாக வெற்றிகொண்டது.
தொடர்ந்து 32 அணிகள் சுற்றில் நெதர்லாந்துடனான போட்டியை 1 – 1 வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட மொரோக்கோ பெனல்டிகளில் 3 – 2 என வெற்றிபெற்று 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. 16 அணிகள் சுற்றில் கனடாவை 3 – 0 என இலகுவாக மொரோக்கோ வெற்றிகொண்டது.
இந்த இரண்டு அணிகளினதும் போட்டி முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கால் இறுதிப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமான காலிறுதிப் போட்டியில் மொரோக்கோவை 2 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி தனது அபார வெற்றியைப்பதிவு செய்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் 27-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. 28-வது நிமிடத்தில் பிரான்சின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறினார். போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை.
தொடர்ந்து ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணிக்காக 60வது நிமிடத்தில் கிலியன் எம்பாப்பே முதல் கோலைப் பதிவு செய்தார். 66வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பலே அணியின் இரண்டாவது கோலைப் பதிவுசெய்தார்.
பதிலடி கொடுக்க மொரோக்கோ அணி மேற்கொண்ட தீவிர முயற்சிகளை பிரான்சின் பலமான தடுப்பாட்டம் முறியடித்தது. ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் 2-0 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி தொடரின் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளதுடன் மொரோக்கோ அணியின் உலகக் கிண்ண கனவு இந்த கால்இறுதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2022 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் மொரோக்கோவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் அதே வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளது.
27 வயதில் 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய மிக இளம் வயது வீரரான கிலியன் எம்பாப்பே இப்போட்டியில் அடித்த கோலின் மூலம் உலகக் கிண்ண நாக்-அவுட் சுற்றுகளில் 12 கோல்கள் பதிவு செய்து அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி நடப்புத் தொடரில் 8 கோல்களுடன் லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். இதேவேளை உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியை விட அவர் ஒரு கோல் பின்தங்கியுள்ளார்.
பிரான்ஸ் அணி வீரர்களின் புதிய முயற்சிகள் மற்றும் அவர்களின் சிறந்த ஆட்டத்தினால் இன்றைய வெற்றி பதிவுசெய்யப்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இன்றைய வெற்றியுடன் பெல்ஜியம் அல்லது ஸ்பெய்ன் அணியுடன் அரையிறுதியில் பிரான்ஸ் அணி மோதவுள்ளது.

