Saturday, July 4, 2026 9:26 pm
குட்கா முறைகேடு வழக்கில், அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை சட்டவிரோதமாக உற்பத்தி செய்யவும், தடையின்றி விற்பனை செய்யவும் அப்போதைய அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு, சிபிஐ அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராகச் சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை இனிமேலும் தாமதப்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கைச் சென்னை சிறப்பு நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் உரிய சாட்சிகளை விசாரித்து, சட்டப்படியான இறுதி தீர்ப்பை வழங்க தேவையான நடவடிக்கைகளை விசாரணை நீதிமன்றம் எடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சி.விஜயபாஸ்கர் தனது அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக.,வில் சென்று இணைந்துள்ளார். தன் மீதான வழக்கில் இருந்து தப்பிக்கத் தான் அவர் தவெக.,வில் சென்று இணைந்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வந்தனர். சி.விஜயபாஸ்கர் தவெக.,வில் இணைந்து ஓரிரு நாட்களிலேயே அவர் மீதான குட்கா வழக்கை விரைந்து முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

