Friday, July 3, 2026 3:06 pm
இலங்கையின் வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது எழுத்துமூலமான கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில் ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது.

