Wednesday, July 1, 2026 10:22 am
பாகிஸ்தான் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடத்தின் கூரை நீண்ட நாட்களாகவே சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. சிறுவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே கூரையின் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. கூரையின் மேல் ஏற்றப்பட்ட அதிகப்படியான பாரம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

