Saturday, June 13, 2026 10:00 pm
எஸ்டாடியோ குவாடலஹாராவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் , ‘ஏ’ பிரிவு போட்டியாளரான செக் குடியரசை ஒரு கோல் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது தென் கொரியா.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. செக் குடியரசு தனது முதல் கோலை அடித்து கணக்கை தொடங்கியது. லாடிஸ்லாவ் க்ரெஜ்ஸி 59 வது நிமிடத்தில் அந்த கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-0 என்ற நிலையில் சூடுபிடித்தது.
ஆட்டத்தின் 67 வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு ஹ்வாங் இன்போம் முதல் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதன் மூலம் தென் கொரியா வீரர்களுக்கு நம்பிக்கை பிறக்க, அட்டம் கூடுதல் விறுவிறுப்புடன் நடைபெற்றது. இதையடுத்து தென் கொரியா வீரர் ஓ ஹியான் கியூ ஆட்டத்தின் 80 வது நிமிடத்தில் கோல் அடித்து கணக்கை 2 ஆக உயர்த்தினார்.
தென் கொரியா அணி செக் குடியரசு அணியை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. கடைசி வரை போராடிய செக் குடியர்சு நாடும் ஆட்டத்தை சமன் செய்ய முடியாமல் தடுமாறியது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தென் கொரியா அணி செக் குடியரசு அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆசிய அணி, இறுதிப் போட்டிகளில் தொடர்ந்து 11-வது முறையாகப் பங்கேற்றது. சன் ஹியுங்-மின் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்க, 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் செக் குடியரசு அணிக்காக பேட்ரிக் ஷிக் களமிறங்கினார்.

