Wednesday, June 3, 2026 1:15 pm
தமிழக முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு, தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலமைச்சர் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்துக் கூறி, ஒரு சிறப்புப் பரிசினையும் வழங்கினார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மிக முக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஜூன் 18ம் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா (மாநிலங்களவை) தேர்தல் தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாகப் பேசியிருக்கலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.

