Tuesday, May 26, 2026 10:48 pm
மேகதாது அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்த தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்த நிலையில், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழக அரசின் மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா அமர்வு, ‘மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் நாங்கள் கவனமாக பரிசீலித்தோம். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்’ என கூறி மனுவை நிராகரித்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடரலாம். தற்போதைய சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த மனு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு ஏற்க முடியாது” என்று கூறி, தமிழக அரசின் மனுவை நிராகரித்தனர்.
இந்நிலையில், இதே காரணங்களைச் சுட்டிக்காட்டி மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

