Sunday, May 17, 2026 8:53 pm
அரசியல் விமர்சகரும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் விமர்சகராகவும், ஊடக விவாதங்களில் திமுக ஆதரவு பேச்சாளராகவும் அறியப்படுபவர் பொன்ராஜ். இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், அப்துல்கலாம் விஷன் இந்தியா மூவ்மெண்ட் இயக்கத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார். நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இவர், தவெகவின் பெண் தொண்டர்கள் பற்றி அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, சென்னை டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். அத்துடன் பொன்ராஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கையும் விஜய் வெளியிட்டிருந்தார். இதையடுத்து, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி பொன்ராஜ் மன்னிப்பும் கோரினார். அதேநேரத்தில், தவெகவினர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, விஜய் மீது பொன்ராஜ் சென்னை பொலிஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், தவெக பெண் தொண்டர்கள் பற்றி அவதூறாக பேசியதாக பொன்ராஜ் மீது தவெக நிர்வாகிகள் புகார் அளித்து இருந்தனர். பெண்களைப் பொதுவெளியில் கொச்சைப்படுத்திப் பேசியதாக பொன்ராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தவெக கிழக்கு மாவட்டச் செயலாளருமான ராஜ்குமார், கடலூர் புதுநகர் பொலிஸ் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்நிலையில்,பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பொன்ராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல சென்னையிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

