Friday, May 15, 2026 2:34 pm
இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் காரணமாக மக்கள் உயிரிழந்தமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் , நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்.
யாழ்ப்பாணம் மத்திய கலாசார நிலையம் தொடர்பான அண்மைய அமைச்சரவை தீர்மானம் , தமிழ் மக்களின் அபிலாசைகளை ஆத்மார்த்தமாக புரிந்து கொண்டவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (15) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்த அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
‘யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக யாழ். மாநகர சபையில் நேற்று (14) எமது கட்சியின் உறுப்பினர் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா , 2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த கலாசார மத்திய நிலையத்தினை மத்திய அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ளீர்ப்பது என்பது இந்த அரசாங்கத்தின் சிந்தனை மாத்திரமல்ல.
எங்களுடைய தனித்துவங்ளையும் காலாசார பண்பாட்டு விழுமியங்களையும் தமிழ் மக்களுடைய தனித்துவ அடையளத்தினையும் பறைசாற்றுகின்ற யாழ்ப்பாணத்தின் தனித்துவங்ககளையும் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதற்கு உரிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு இந்தக் கலாசார மத்திய நிலையத்தினை முழுமையாக யாழ். மாநகர சபையிம் ஒப்படைக்காமல், தென்னிலங்கையின் பிடியையும் வைத்திருக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த கால அரசாங்களிடமும் காணப்பட்டு வந்தது. எனினும், கடந்த கால அரசாங்கங்களில் பங்கெடுத்திருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் , முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சிகளையும் தந்திரோபாய கையாண்டு அந்த முயற்சிகளை தடுத்திருந்தார்.
2023 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில்,அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் புதுடெல்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அப்போதைய துறைசார் அமைச்சர் ஒருவரினால்,பாரத பிரதமர் நரேந்திரமோடியிடமே,யாழ்ப்பாண காலாசார மத்திய நிலையதினை இலங்கை அரசாங்கத்திடம் வழங்குமாறு கோரிக்கை விடுக்க்பபட்டிருந்தது.
அப்போது, அந்த இடத்திலேயே எமது செயலாளர் நாயகத்தினால் குறித்த கோரிக்கைக்கு ஆட்சேபனை வெளிப்படுத்தப்பட்ட நிலையில், ஏற்கனவே தீர்மானிக்கப்ட்டவாறு யாழ். மாநகர சபையிடமே அதனை ஒப்படைப்பது என்பதில் எந்த மாற்றமும் தேவையில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, தற்போதைய அரசாங்கத்தினால் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. தற்போதைய அரசாங்கத்தில் எங்களுடைய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய , இந்த மண்ணிலே எங்களுடைய இருப்பையும் பாதுக்காக்க வேண்டும் என்ற அக்கறையுள்ளவர்கள் இல்லாததன் வெளிப்பாடாகவே இந்த தீர்மானத்தினை நாங்கள் பார்க்கின்றோம்.
தற்போதைய அரசாங்கத்தில் எமது மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்றவர்கள், தங்களுடைய கட்சி தலைமைக்கு தங்களுடைய விசுவாத்தினை வெளிப்படுத்துவதில் முண்டியடிகக்கின்றார்களே தவிர, எமது மக்களின் உணர்வுகளை கண்டு கொள்வதில்லை என்பதன் வெளிப்பாடாகவே இந்த தீர்மானம் அமைந்திருக்கின்றது.
இந்த இடத்தில் எமது மக்கள் ஒரு விடயத்தினை புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்திருக்கின்ற போதிலும், தமிழ் மக்களுடைய அபிலாசகைள் விடயத்திலே, கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் எவ்வாறான சிந்தனையை கொண்டிருந்தார்களோ அதே சிந்தனையோடு அதே நிகழ்ச்சி நிரலில் இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றது.
இங்கே ஒரு யதார்த்தம் வெளிப்படுத்தப்படுகின்றது. என்னவெனில், இந்த நாட்டிலே தமிழ் மக்களைப் பொறத்தவரையில்,யார் ஆட்சி அதிகாரத்தில் வருகின்றார்கள் என்பது முக்கியமல்ல, அவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான், ஆனால் எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்றவர் இந்த மண்ணின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்கள் இந்த மண்ணின் இருப்பையும் இந்த மண்ணின் தாற்பரியங்களையும் ஆத்மார்த்தமாக நேசிப்பவர்கள் இந்த மண்ணில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யதார்த்ததினையே அமைச்சரவையின் இவ்வாறான தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றன’ என்று தெரிவித்தார்.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாகவும், நேற்று யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற நிகழ்வில் ஈ.பி.டி. பி. கலந்து கொள்ளாதது பற்றியும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஈ.பி.டி பி. ஊடகச் செயலாளர்,
‘இந்த மண்ணிலே இடம்பெற்ற ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டும் என்ற ஆலோசனை எங்களுடைய தலைமையினால் எங்களுடைய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஈழ விடுதலைப் போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அதற்கான பொதுவான தினம் நிர்ணயிக்கப்பட்டு அனைவரும் நினைவ கூரப்பட வேண்டும் என்ற தனிநபர் பிரேரணை கூட நாடாளுமன்றில் எமது செயலாளர் நாயகததினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அந்த அடிப்படையிலே, இந்த நாட்டிலே இறுதி யுத்தம் இடம்பெற்ற போது, முள்ளிவாய்க்கால் பகுதியிலே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கின்றாரகள். அவர்கள் அனைவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.
உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு, உயிரிழந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூருவதற்கு முழுமையான உரிமை இருக்கின்றது என்பதையும் நாங்கள் வலிறுத்துகின்றோம்.
அதேவேளை இறுதி யுத்தத்தின்போது, யுத்த குற்ற மீறல்கள் இடம்பெற்று இருக்கின்றன. யுத்த குற்றமீறல்களில் இரண்டு தரப்பினரும் ஈடுப்பட்டிருக்கின்றனர் என்பதை, சர்வதேச நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கை போன்ற பல்வேறு அறிக்கைகள் உறுதிப்படுத்துவதுடன், அந்த பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த மக்களும் வெளிப்படுத்துகின்றனர் என்ற அடிப்படையில் யுத்த குற்றம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் தொடர்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
ஆனால் எங்களுடைய மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளை பெற்றுக்கொடுக்காதஇ எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு இடையூறாக அமையக்கூடிய சொல்லாடல்களை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் நலன்களை முன்னிறுத்திய அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டு கீழ்த்தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது’ என்று பதில் அளித்தார்.

